My Tweets @bloggerzbible

14 April, 2014

Ukraine-ன் தொலைந்து வரும் அடையாளம்

| | with 0 comments |
அந்த அடையாளம் Crimea என்று நீங்கள் யூகித்திருக்க கூடும். இன்றைய தேதியின் நிகழ்வுகள் படி அதை தவறு என கூற முடியாது. ஆனால் இந்த பதிவின் மையம்மோ மெல்ல தொலைந்து வரும் வேறொரு அடையாளம். Ukraine-ன் கவித்துவம் மிகுந்த திரைப் படைப்புகள் (poetic films) தான் அது.

இந்த படைப்புகளை ஒரு தனிப்பட்ட  படைப்பு வகை (genre) எனக் கூற இயலாது - ஆனால் இன்றளவிலும் Ukraine-ன் தேசிய சினிமாவை அடையாளம் காட்டும் ஒரு தலையாய பாணியாக கருதலாம். கவித்துவம் மிகுந்த படைப்புகள் என்றால் நமது ‘ஹரிதாஸ்', 'பக்த காளிதாஸ்’ மாதிரி நினைத்து விட வேண்டாம். இன்னும் சொல்லப் போனால் இதில் பல silent film era-வை சேர்ந்தவை. இவை பெரும்பாலும் கலைநயத்தையும் கிராமிய நவீனத்தையும் பறைசாற்றும் படைப்புகளாக திகழ்ந்தன. ‘உருவக' மொழியை அதிகம் பயன்படுத்தியதாலும் இவ்வாறு குறிப்பிடபடுவதுண்டு. 1920-30 களில் உயிர் பெற்று இடையில் சில ஆண்டுகள் காணாமல் போய் பின்னர் மீண்டும் 1960-களில் உயிர்த்து வரலாற்றில் முக்கிய இடம் வகித்தது இந்த பாணி. பாரம்பரிய சினிமாவின் எல்லைகளைத தாண்டி சிந்திக்கும் படைப்பாளிகளிகள் பலர் இந்த பாணி உருவாக காரணமாக இருந்தனர். இந்த வரிசையில் முதன்மையானவர் - Alexander Dovzhenko. இவரது படைப்புகள் poetic cinema-வின் முதல் அலையாக எழுந்தன. Sergei Parajanov, Yuri Illienko மற்றும் Leonid Osyka இரண்டாம் அலைக்கு பெரிதும் வித்தாக இருந்தவர்கள். ஒரு வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால் Ukraine-ன் இந்த பாணித் திரைப்படங்கள் முக்கால்வாசி அழிந்து  விட்டன. நாம் காண  வேண்டும் என நினைத்தாலும் அவ்வளவு எளிதாக கிடைக்க மாட்டா. அவ்வளவு எளிதாக dvd-யிலோ online-இலோ வாடகைக்கோ கிடைப்பதில்லை. இருக்கிறப் பிரச்சனையில் இது ரொம்ப முக்கியமான்னு Ukraine வேண்டுமானால் நினைக்கலாம். உலக சினிமா அப்படி நினைக்க வாய்ப்பில்லை - அதனால் தான் இத்திரைப்படங்களை சில film festival-களின் மூலம் பொது மக்கள் கண்டுகளிக்க அறிய வாய்ப்பு வழங்கப் படுகிறது

அப்படி இப்படி அலசி ஆராய்ந்து இந்த பாணியின் மூன்று திரைப் படங்களை (Zvenigora, Earth,  Shadows of Forgotten Ancestors) காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

Zvenigora

Zvenigora, Arsenal மற்றும் Earth - இந்த மூன்று திரைப்படங்களையும் Ukraine trilogy என குறிப்பிடுவது உண்டு. Zvenigora (1928) Dovzhenko-வை சினிமா உலகிற்கு அடையாளம் காட்டிய முக்கிய படைப்பாக விளங்கியது. படத்தை பார்த்தது மட்டும் அல்லாமல் அதைப் பற்றி படித்தும் எனக்கு முழுதாக புரிந்தது என கூற முடியாது! இத்தனைக்கும் இதில் dialogue இல்லை என்றாலும் background audio உண்டு. Silent film காலத்தில் படைப்பாளிகளின் கஷ்டத்தை நன்கு உணர முடிந்தது. Ukraine-ன் ஆயிரம் காலத்து புதையல் கதையை ஒரு வயோதிகன் தனது பேரனுக்கு கூறுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. புனைகதையும் நிஜகதையும் நேர்த்தியாக கலந்து வெளிப்படுத்தியமைக்கு உலக அளவில் வரவேற்ப்பை பெற்றது. உலக ரசிக பெருமக்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் இது எளிதாக புரிந்ததோ என்னமோ இக்கதையை புரிந்துகொள்வதற்கு எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. மனதில் சில தனிப்பட்ட காட்சிகள் மட்டுமே நின்றன - அதில் தனித்து நிற்பது- compelling bgm-உடன் slow motion-ல் வரும் opening scene - 'அபூர்வ சகோதரர்கள்'-ல் வருவது போல "சார் (Dovzhenko), எங்கியோ போயிட்டீங்க"-ன்னு சொல்ல வைத்தது.

Earth 

இந்த silent திரைக்கதையில் அன்றைய Soviet Union-ன் பல கோணங்களின் வெளிப்பாடுகளை காண முடியும் - collectivization (பல விவசாயிகள் கூட்டாக தொழில் செய்வது), நாத்திகம், கம்யுனிசம் மற்றும் முன்னேற்றத்திற்கான புரட்சி – அதில் பிரதானம். கதை நாயகன் சமுதாய மற்றும் தொழில் முன்னேற்றத்தை நாடும் ஒரு துடிப்பான இளைஞன். அவன் முயற்சியால் tractor முதன் முதலாக மக்களின் கரகோஷத்திற்கு மத்தியில் கிராமத்திற்கு       கொண்டு வரப்படுகிறது. பின்னர் அதன் இயக்கம் அணைவரையும் வியப்பில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல் ஒரு புதிய எதிர்காலத்தையும் காட்டுவதாக அமைக்கப்பட்டிருக்கும். 1920-30 களின் montage technique-  (வரிசையாயாக பல தனிக் காட்சியமைப்புகளை தொகுத்து ஒரு தொடர்க் காட்சியாக வெளிப்படுத்துவது) பயன்படுத்தி இதை மிகப் பிரமாதமாக Dovzhenko சித்தரித்திருப்பார். Ashutosh Gowariker-ன் Hindi திரைப்படம் (2004) Swades-ல் இதே போன்று ஒரு நேர்த்தியான தொடர் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் Shah Rukh Khan ஒரு கிராமத்திற்கு முதன் முறையாக hydro-electric power plant-ஐ உருவாக்கி தருவது மாதிரி இருக்கும். இவற்றை  ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் இல்லையென்றாலும், Earth உருவாக்கப்பட்ட காலக் கட்டம் தான் அதனை பன்மடங்கு அதிகம் பாராட்டத் தோன்றுகிறது. பின்னர் collectivization-ஐ விரும்பாத ஒருவன் நாயகனை கொலை செய்கிறான். நாயகனின் ஈமச்சடங்கு நாத்திகத்தையும் நவீன யுகத்தை நோக்கி செல்வதையும் உணர்ச்சிபூர்வமாக Dovzhenko வடிவமைத்திருப்பார். அதன் முடிவில் communist விமானம் ஒன்று மேலே பறந்து செல்வது போல் உவமைக் காட்சியும் வரும்.

Shadows of Forgotten Ancestors

Shadows of Forgotten Ancestors (1964), Sergei Paradjanov-ஐ சினிமா உலகில் ஒரு சிறந்த இயக்குனராகவும் socialist realism வட்டத்தை தாண்டியதால் அரசாங்கத்தின்  எதிரியாகவும் அடையாளம் காட்டிய படைப்பு. ஒரு மலைவாழ் இனத்தின் மத்தியில் நடக்கும் திரைக்கதையின் ஓட்டம் முதலில் Romeo & Juliet போன்ற காதல் தோல்வி, பின்னர் கல்யாண வாழ்வின் தோல்வி, இதனூடே கொஞ்சம் அமானுஷ்ய நம்பிக்கையின் வெளிப்பாடு என அன்றைய காலத்திற்கு சற்றே வித்தியாசமான கலவையை கொண்டது.  இப்படத்தில் இரண்டு அம்சங்கள் என்னை பாதித்தன என்று கூறலாம் - அவை ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும். அதிலும் அடி வயிற்ரை நெருடும் மாதிரியான ஒலிப்பதிவு கதையின் ஓட்டத்திற்கு மிகப் பெரிய பலம்.

Mark Donskoi-ன் The horse that cried (1957), Yuri Illienko-ன் Spring for the thirsty (1965) மற்றும் The Eve of St. John (1968) இந்த பாணியில் பிரசித்தி பெற்ற மேலும் சில படைப்புகள். இவற்றைக் காணும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.
எது எப்படியோ Crimea-வை காட்டிலும் இந்த தேசிய அடையாளத்தை நிலைபெற செய்யும் அளவிற்கு Ukraine நாடு ஏதாவது செய்ய வாய்ப்புள்ளதா? பதில் என்னவோ நமக்கு தெரிந்தது தான்...

பதிவின் முடிவிற்கு முன் சில துளிகள்:
  • Alexander Dovzhenko - father of Ukraine cinema என்று கருதப்பட்டவர் ஆவார்
  • Sergei Parajanov, Dovzhenko-ன் ஆஸ்தான சிஷ்யனாக விளங்கியவர்
  • Parajanov Armenia மற்றும் Ukraine இரு நாட்டின் தபால் தலைகளிலும் இடம் பெற்றவர் ஆவார்
Post a Comment

0 comments: